சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் 8 புதிய நூல்களை வெளியிட்டதுடன், கலைஞர் மாணவர் பத்திரிகையாளர் திட்டம் மற்றும் கலைஞர் நிதிநல்கை என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

மறைந்த கருணாநிதியின் 7வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி நடைபெற்றது. பின்னர், மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
பின்னர் அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள கருணாநிதி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, முத்தமிழ்ப் பதிக்கத்தின் 8 புதிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன்படி, முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில், உருவாகியுள்ள “தி.மு.க வரலாறு”, “தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!”, “இளைய திராவிடம் எழுகிறது!”, “மாநில சுயாட்சி முழக்கம்”, “திராவிட இயக்க வரலாறு கேள்வி-பதில்”, “இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன்?”, “இந்தியாவுக்கு வழிகாட்டும் திராவிடமாடல்!”, “இந்தியாவில் சமூக நீதியும் இட ஒதுக்கீடும்” ஆகிய 8 புதிய நூல்களை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து, திராவிட இயக்க இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்க கலைஞர் நிதிநல்கை திட்டம் என பெயரிலான புதிய திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார் .
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலந்துகொண்டு, கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தை தொடங்கி வைத்து அதன் இலச்சினையை வெளியிட்டார். அதை நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து திராவிட இயக்க இளம் ஆய்வாளர்களை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுத்து ஊக்குவிக்கும் விதமாக கலைஞர் நிதிநல்கை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் இலச்சினையை அவர் வெளியிட திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார்.
இந்த திட்டத்தின் மூலம் இளம் ஆய்வாளர்கள் 15 பேருக்கு ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 8 நூல்களான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும், தி.மு.க. வரலாறு, இளைய திராவிடம் எழுகிறது, மாநில சுயாட்சி முழக்கம், திராவிட இயக்க வரலாறு கேள்வி பதில், இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன்?
இந்தியாவுக்கு வழிகாட்டும் திராவிட மாடல், ‘இந்தியாவில் சமூக நீதியும் இட ஒதுக்கீடும்’ ஆகிய புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.
இதில் ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ ‘இளைய திராவிடம் எழுகிறது’ ஆகிய 2 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி குறித்த சிறப்பு காணொலியும் ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைவருக்கும் கலைஞரின் சிலைகளை நினைவுப் பரிசாக உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி எம்.பி., ஐ.பெரியசாமி, திருச்சி சிவா எம்.பி., ஆ.ராசா எம்.பி., அந்தியூர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் புத்தக எழுத்தாளர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.