டெல்லி: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று கொடுத்தது தொடர்பான புகாரில், 2வது நாளாக இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், சிபிஐ நடவடிக்கை குறித்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அவசர கடிதம் எழுதி உள்ளார். முன்னதாக சிபிஐ-ன் 2வது நாள் விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “என்னை அழைப்பது சிபிஐயின் பாக்கியம்” என்று கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் 263 சீனர்களுக்குச் சட்டவிரோதமாக விசா வழங்க 50 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்து அவருக்கு சொந்த இடங்களில் சோதனை நடத்தியது. அதைத்தொடர்ந்து கார்த்தி சிரம்பரத்தின்  ஆடிட்டர் பாஸ்கர்  ராமன் கைது செய்யப்பட்டார். அவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

இதற்கிடையில்,  முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வழக்கை விசாரித்த  டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மே 30ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும்,  அவரை கைது செய்ய வேண்டுமானால் மூன்று வேலை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில்,  டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜராகி, விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இன்று 2வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று விசாரணை தொடர்கிறது.

இந்த சூழலில்மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் இன்று பரபரப்பு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், இந்தப் பிரச்சினை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எனது உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பற்றியது. கடந்த சில ஆண்டுகளாக என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் தற்போதைய அரசாங்கமும் அதன் விசாரணை அமைப்புகளும் போலி வழக்குகளைத் தொடர்கின்றன. இது எதிர்ப்புக் குரல்களை அடக்கும் முயற்சியாகும். இவ்வாறு சபை உறுப்பினரை மிரட்டுவது அவையின் சிறப்பு உரிமையை மீறுவதாகும்.

எனது இல்லத்தில் மத்திய புலனாய்வு பிரிவு சோதனை நடத்தியபோது சில அதிகாரிகள் நாடாளுமன்ற நிலைக்குழு தொடர்பான மிக ரகசியமான மற்றும் முக்கியமான தனிப்பட்ட குறிப்புகளையும் ஆவணங்களையும் கைப்பற்றினர். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எனது கடமைகளில் தலையிடும் சிபிஐயின் இந்த நடவடிக்கைகள் நமது ஜனநாயக கோட்பாடுகளின் மீதான நேரடி தாக்குதலுக்கு ஒப்பாகும். எனவே நாடாளுமன்ற சிறப்புரிமையை அப்பட்டமாக மீறும் இந்த பிரச்சினையை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் உடனடியாக முகாந்திரம் எடுத்துக்கொண்டு நாடாளுமன்ற உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.