சென்னை: சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்ததாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீத வழக்கு பதிவு செய்து, சோதனை நடத்திய சிபிஐ, அவரது ஆடிட்டர் பாஸ்கரராமனை கைது செய்துள்ளது.
முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் வீடுகளில் நேற்று சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. அவர்களது சென்னை, மும்பை, டெல்லி வீடு உள்பட 11 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று ப. சிதம்பரம் விளக்க மளித்தார்.
இந்த ரெய்டு ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ள சிபிஐ, சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகவும், ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது முறைகேடாக விசா பெறப்பட்டிருப்பதாகவும் கூறியது. இதுதொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தது.
இந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சிபிஐ கைது செய்தது. நேற்று நள்ளிரவில் ஆடிட்டர் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் பாஸ்கர ராமனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிபிஐ காவலில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.