கோட்டா

ஞ்சய் லீலா பன்சாலியின் திரைப்படமான பத்மாவதி இந்திப் படத்துக்கு எதிர்ப்பு பெருகிக் கொண்டு வருகிறது.

ராஜஸ்தானின் சித்தூர் அரசி பத்மினி என்னும் பத்மாவதியின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் ஆரம்பமாகி வளர ஆரம்பித்த போதே சர்ச்சைகளும் வளரத் தொடங்கின.   இந்த திரைப்படத்தை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்டது.

உத்திர பிரதேச அரசு இந்த திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.  தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் நடித்துள்ள இந்தத் திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவின் போது ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஆகாஷ் மால் என்னும் தியேட்டரில் நடைபெற இருந்த நேரத்தில் ராஜ்புத் அமைப்பான கார்னி சேனாவால் ஆர்ப்பாட்டம் நடத்த்தப் பட்டு விழா பாதியில் நிறுத்தப் பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்திய கார்ணி சேனாவின் தலைவர் மகிபால் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்தப் படம் வெளி வரக் கூடாது.  இது எங்கள் எச்சரிக்கை.  அரசி பத்மாவதியை கேவலம் செய்வதாக உள்ள இந்தப் படத்தில் நடித்த தீபிகா படுகோனேவை எச்சரிக்கிறோம்.  ராஜபுத்திரர்கள் பெண்களை தாக்க மாட்டார்கள்.  ஆனால் இந்தப் படம் வெளிவந்தால் நாங்கள் லட்சுமணனாக மாறி சூர்ப்பனகை தீபிகாவின் மூக்கை அறுத்து வீசுவோம்.

இந்தத் திரைப்படம் திரையிடப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ள டிசம்பர் 1 ஆம் தேதி இந்தப் படம் வெளி வந்தால் கடும் கலவரம் வரும்.   எங்கள் முன்னோர்களின் ரத்தத்தை களங்கப் படுத்த முயன்றால் லட்சக்கணக்கில் கூடி அவர்கள் ரத்தத்தால் எங்கள் களங்கத்தை துடைப்போம்.   அன்று இந்தியா முழுவதும் கடையடைப்பு நடக்கும்.  எங்களை தடுத்தால் நாடே பற்றி எரியும்.” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.