பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் புதிய முதல்வராக பொம்மை பதவி ஏற்றதைத் தொடர்ந்து, புதிய அமைச்சர்கள், ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் 2:15 மணியளவில் பதவியேற்க உள்ளனர்.
கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து, புதிய முதலமைச்சராக, எடியூரப்பா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து, கடந்த ஜூலை 28-ஆம் தேதி பசவராஜ் பொம்மை அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றார். அதையடுத்து, அமைச்சர் பதவிகளுக்கு கடுமையான போட்டி நிலவியது. இது தொடர்பாக, முதல்வர் பசவராஜ் பொம்மை டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர்உள்பட கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். யார் யாரை அமைச்சர்களாக நியமனம் செய்யலாம் என்பது குறித்து, டெல்லியில் மேலிடத் தலைவா்களுடன் கடந்த இரு தினங்களாக பேச்சுவாா்த்தை நடத்திவந்தார். இதையடுத்து அமைச்சர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, கவர்னரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, புதிய அமைச்சரவை இன்று பிற்பகல் 2.15 மணியளவில் பதவியேற்கவுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, கடந்த இரண்டு நாட்களில் டெல்லியில் அமைச்சர்கள் தொடர்பான எல்லாவற்றையும் விவாதித்து, அமைச்சர்கள் யார் யார் என்பதை முடிவு செய்தோம் என்றார்.
முன்னதாக டெல்லியில் செய்தியளார்களை சந்தித்தபோது, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திரா புதிய அமைச்சரவையில் இருப்பாரா என்பது குறித்த கேள்விக்கு, கட்சி தலைமைதான் முடிவு செயும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.