பெங்களூரு

ர்நாடகா மேகதாது அணை விவகாரத்தில் பின் வாங்காது என புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்

கர்நாடகா மற்றும் தமிழகத்துக்கு இடையே காவிரி நீர் பிரச்சினை தொடர்ந்து வருகிறது.  காவிரி நதி நீர் ஆணையம் தமிழகத்துக்கு நீர் வழங்க ஆணையிட்ட போதும் கர்நாடக மாநிலம் காவிரி நீரைச் சரியான நேரத்தில் திறந்து விடாமல் வெள்ள காலங்களில் மட்டுமே திறந்து விடுகிறது.  இந்நிலையில் காவிரியில் மேகதாது பகுதியில் தடுப்பணை கட்ட கர்நாடகா மும்முரம் காட்டி வருகிறது.

மேகதாது அணையினால் தமிழகத்துக்கு நீர் வரத்து பாதிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  ஆயினும் கர்நாடகா தமிழக எதிர்ப்பையும் மீறி கட்டுமானம் கட்ட ஆர்வம் காட்டி வருகிறது.   இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்து புதிய முதல்வராக பசவராஜ்  பொம்மை பதவி ஏற்றுள்ளார்.

முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர். “கர்நாடக அரசுக்கு மேகதாது அணை கட்ட சட்டம் சாதகமாக உள்ளது.  இது குறித்து நான் விரைவில் பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்தித்து அனுமதி பெற உள்ளேன். விரையில் மேகதாதுவில் அணை கட்டப்படும்.

இந்த அணை விவகாரத்தில் கர்நாடகா என்றும் பின்வாங்காது.  இவ்வாறு பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.   இந்த திட்டம் குடிநீருக்காக உருவாக்கப்பட்டுள்ளது.  இது தமிழகத்துக்கும் பலன் அளிக்கும்.  காவிரியின் உபரி நீரைப் பயன்படுத்திக் கொள்ளக் கர்நாடக அரசுக்கு முழு உரிமை உள்ளது” என தெரிவித்துள்ளார்.