பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தில் ஒரு திருநங்கையின் திருமணம் முதன்முறையாக முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநங்கைகளின் உரிமைகளுக்காக போராடி வருபவர் அக்கை பத்மஷாலி. திருநங்கையான இவருக்கும் – சமூக செயற்பாட்டாளர் வாசுதேவ் ஜோடிக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி திருமணம் நடந்தது. ஆனால், சரியாக ஒருவருடம் கழித்தே அவர்களுடைய திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய முடிந்திருக்கிறது.

திருநங்கைகள் திருமணப் பதிவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனாலும், கர்நாடக அரசவை திருநங்கைகள் திருமண உரிமைச் சட்டம் தொடர்பாக அண்மையில் திருத்தங்கள் மேற்கொண்ட நிலையில் கடந்த 23ம் தேதி அக்கை – வாசுதேவ் தம்பதியின் திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தனது திருமண பதிவு குறித்து அக்கை கூறுகையில், ‘‘எனக்கு திருமண உறவு மீது பெரிய ஈடுபாடு மற்றும் நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால், 8 ஆண்டுகளுக்கு முன்னதாக நான் தன்பாலின உறவாளர்களுக்காக குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர் வாசுதேவை சந்தித்தேன்.

அப்போதிருந்தே எனது தோழிகள் எங்கள் திருமணத்தை பற்றி பேசுவர். அவர்களின் உந்துதல் காரணமாக நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். எங்கள் திருமணத்தை எங்கள் வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர்” என்றார்.