பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு குடைச்சல் கொடுத்து வந்த அமைச்சர் சி.டி.ரவி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு கட்சி மேலிடம், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவி வழங்கி உள்ளது. இதன் காரணமாக முதல்வர் எடியூரப்பா சற்றே நிம்மதியடைந்துள்ளார். ஆனால், அவரது வயது காரணமாக, அங்கு மீண்டும் புயல் வீசத்தொடங்கி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில், முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் சி.டி.ரவி. இவர், முதல்வருக்கு எதிராக அவ்வப்போது பிரச்சனைகளை எழுப்பி வந்தார். மேலும், அதிருப்தியாளர்களில் ஒருவரன கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். அத்துடன் எடியூரப்பா மகன், மாநில அரசின் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கடும் தர்மசங்கடத்துக்கு உள்ளான எடியூரப்பா, அதிருப்தியாளர்கள் குறித்து பாஜக மேலிடத்தில் புகார் கூறியதாக தகவல்கள் வெளியான.
இதையடுத்து, அமைச்சர் சி.டி.ரவிக்கு, பாஜக தேசியப் பொதுச் செயலாளர் பதவி வழங்கி பாஜக தலைமை அறிவித்தது. பாஜக கட்சியின் விதிப்படி, ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்பதால், சி.டி.ரவி நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் எடியூரப்பாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதன் காரணமாக எடியூரப்பாக தற்காலிகமாக நிம்மதி அடைந்துள்ளார்.
தற்போதைய நிலையில், கர்நாடக அமைச்சரவையில் 7 அமைச்சர்களுக்கான பதவியிடங்கள் காலியாக உள்ளது. இதை கைப்பற்ற அங்கு பலத்த போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், முதல்வர் எடியூரப்பா மீது, கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார். எடியூரப்பாவுக்கு தற்போது 78 வயதாகும் நிலையில், ‘பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி இருப்பது போல, 75 வயதுக்கு அதிகமானவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது என்ற எழுதப்படாத விதியும் இருக்கிறது’ என்பதை சுட்டிக்காட்டி, முதல்வர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்பதை மறைமுகமாக தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த, சி.டி.ரவியிடம், கேள்வி எழுப்பினர். அதற்கு சி.டி.ரவி, “பாஜகவின் விதிகள், அனைத்து பாஜகவினருக்கும் பொருந்தும். எல்லோரும் கட்சியின் விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும். இல்லாவிடில் கட்சி மேலிடம் தலையிட்டு, விதிமுறையை அமல்படுத்தும்” என்று, எடியூரப்பாவை மீண்டும் மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.
78 வயதான் நிலையில், முதல்வர் எடியூரப்பா தற்போதும் முதல்வர் பதவியில் தொடர்ந்து வருவதால், அவரை முதல்வர் பதவியில் இறக்க வேண்டும் என பாஜக அதிருப்தியாளர்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதனால் அங்கு மீண்டும் உள்கட்சி பூசல் வலுவடைந்து வருகிறது.