பெங்களூரு:

ர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. இன்று சாலை விபத்தில் மரணமடைந்தார். இதில் சதிச்செயல் ஏதும் உள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தற்போது நடந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் ஜாம்கந்தி தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்  சித்து நியமகௌடா சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

இவரது முழுப்பெயர் சித்தப்பா பீமப்பா நியமகௌடா. இவரை சுருக்கமாக சித்து நியமகௌடா என குறிப்பிடுவது வழக்கம்.

இவர் நரசிம்ம ராவின் மத்திய அரசில் அமைச்சராக பணியாற்றியவர்.   இந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை சுமார் 2500 வாக்குகள் வித்தியாசத்தில் சித்து தோற்கடித்தார்.

இன்று காலை விமானநிலையத்தில் இருந்து தனது சொந்த ஊவான பகல்கோட்டுக்கு காரில் வந்துக் கொண்டிருந்தார் சித்து.   இன்று விடியற்காலை சுமார் 4.30 மணிக்கு அவர் வந்துக் கொண்டிருந்த கார் துளசிகேரி அருகே எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியது.  இதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

67 வயதான சித்துவின் மரணத்துக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 225 இடங்கள் உள்ள கர்நாடக சட்டமன்றத்தில் ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆனால் பா.ஜ.க. தனிப்பெருங்கட்சியாக  104 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

அறுதிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும், ஆளுநர் உதவியுடன் அக்கட்சியின் எடியூரப்பா முதல்வர் ஆனார். ஆனால் அவறால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாது என்ற நிலையில் ஒரே நாளில் பதவி விலகினார்.

இதற்கிடையே காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கட்சி எம்.எல்.ஏக்களை பா.ஜ.க. வளைக்க பகீரப்பிரயத்தனம் செய்தது. ஆனால் அது நடக்கவில்லை.

“குறைந்தபட்சம் காங்கிரஸ் மற்றும் ம.த.ஜ. எம்.எல்.ஏக்கள் சிலரை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அவைக்கு வராமல் செய்ய பாஜக முயற்சித்தது” என்றும் செய்திகள் பரவின.

ஆனால் பாஜகவின் எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், காங்கிரஸ் – ம.த.ஜ. கூட்டணி சார்பில் குமாரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் விபத்தில் மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவரது மரணத்திற்கு சதிச்செயல் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.