பெங்களூரு: கொரோனா பராமரிப்பு மையங்களுக்காக, கர்நாடக அரசின் சார்பில், 30000 படுக்கைகள் ரூ.280 கோடி செலவில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், ரூ.21 கோடிகளுக்கே, 30000 படுக்கைகளை உற்பத்தி செய்துவிடலாம் எனும்போது, அம்மாநில அரசின் இந்த நடவடிக்கை கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதேசமயம், மாநில அரசின் அதிகாரிகள் மேற்கொண்ட இந்த திட்டமிடப்படாத மற்றும் புத்திசாலித்தனமற்ற நடவடிக்கையை அம்மாநில முதல்வர் எடியூரப்பா கண்டித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
லேசான அறிகுறிகள் கொண்ட ஒரு நோயாளி, குறைந்தபட்சம் 14 நாட்களை தனிமைப்படுத்தல் மையத்தில் செலவிட வேண்டும். தற்போதைய ஏற்பாட்டின்படி, வாடகைக்கு எடுக்கப்பட்ட படுக்கைக்கு ஒருநாளைக்கு ரூ.800 கொடுத்தாக வேண்டும்.
அந்தவகையில், 14 நாட்களுக்கு, ஒருவருக்கு ரூ.11200 செலவாகும். ஆனால், அதே படுக்கை அமைப்பை ரூ.7000க்கு சொந்தமாகவே வாங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.