பெங்களூரு

கொல்லூர் மூகாம்பிகை கோயில் உதவி செய்து வந்த ஆர் எஸ் எஸ் பிரமுகர் நடத்தும் இருபள்ளிகளுக்கு இனி உதவி வழங்கப்பட மாட்டாது என் கர்னாடகா அரசு ஆணையிட்டுள்ளது.

கொல்லூர் மூகாம்பிகை கோயில் வழியாக இரு தனியார் பள்ளிகளுக்கு 2007-08 ஆம் வருடத்திலிருந்து உதவி அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த உதவி மதிய உணவு, பாடப்புத்தகங்கள் சீருடைகள் போன்றவை மாணவர்களுக்கு வழங்க உதவி செய்து வந்துள்ளது.  இதுவரை கோயிலிலிருந்து சுமார் ரூ2.83 கோடி வரை உதவப் பட்டு வந்துள்ளது.

அதில் ஸ்ரீராம வித்யா கேந்திரா, கல்லடுகா என்ற பள்ளிக்கு சுமார் ரூ.2.32 கோடியும், ஸ்ரீதேவி வித்யா கேந்திரா, புஞ்சா என்ற பள்ளிக்கு ரூ. 50.72 லட்சமும் இந்த 10 ஆண்டுகளில் வழங்கப்பட்டு வந்துள்ளது.  இந்த பள்ளிகள் ஸ்ரீராம வித்யாகேந்திரா டிரஸ்ட் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்த ட்ரஸ்டி ஆர் எஸ் எஸ் பிரமுகரான பிரபாகர் பட் என்பவருக்கு சொந்தமானது.

தற்போது கர்னாடகா அரசு இந்த உதவியை விலக்கிக் கொண்டுள்ளது.   அப்போதைய அரசின் (2007-08) ஆணைப்படி இந்த பள்ளிகளுக்கு உதவி புரிய கோயில் நிர்வாகம் ஒப்புக் கொண்டதாகவும், கர்னாடகா அரசின் இந்து அறநிலையச் சட்டப்படி எந்த ஒரு தனியார் பள்ளிக்கும் கோயில்கள் உதவக்கூடாது என்றும் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பள்ளியின் தாளாளர் பிரபாகர் பட், இந்த உதவியின் மூலம் சுமார் 2250 ஏழைக்குழந்தைகள் பயன் பெறுவதாகவும், அவர்கள் இப்போது உதவி இழந்துள்ளதாகவும் கூறுகிறார்.  மேலும் அரிசி, மற்றும் உணவுப் பொருட்கள் மட்டுமே முதலில் கோயில் மூலம் வழங்கப்பட்டதாகவும், கடந்த மூன்று வருடங்களாக மட்டுமே பண உதவியாக அளிக்கப்படுவதாகவும்,  அந்தப் பணத்திற்கு முறையாக தணிக்கை செய்யப்பட்ட கணக்கு தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் ராம்நாத் ராய் தூண்டுதலிலேயே இந்த உதவிகள் நிறுத்தப்பட்டதாகவும், அவருடைய அரசியல் காழ்ப்புணரிச்சியால் ஏற்கனவே மாற்றப்பட்ட சட்டத்தை மீறி உத்தரவிடப்பட்டு,  ஏழைக் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாகவும் பட் மேலும் கூறியுள்ளார்.