பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிக்கான கல்விக் கட்டணத்தை அம்மாநில அரசு 10 % உயர்த்தியுள்ளது.
கல்விக் கட்டணத்தை 25% உயர்த்துமாறு கர்நாடக அரசுக்கு கர்நாடக மாநில தனியார் பொறியியல் கல்லூரிகள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது.
இதனையடுத்து, கர்நாடக உயர் கல்வித் துறை அமைச்சர் ஜி டி தேவ கவுடா தலைமையில், உயர்கல்வித் துறை அதிகாரிகள், கர்நாடக அரசு உதவி பெறாத தனியார் பொறியியல் கல்லூரிகள் சங்கத்தினர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு தனியார் பொறியியல் கல்லூரி கல்விக் கட்டணத்தை 10% உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து, கர்நாடக உயர்கல்வித் துறை அமைச்சர் ஜி டி தேவகவுடா கூறும்போது,” 10 % கல்விக் கட்டண உயர்வுக்கு தனியார் பொறியியல் கல்லூரிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
விரைவில் தேர்தல் நன்னடத்தை விதி முறை அமலுக்கு வரும் என்பதால், கட்டண உயர்வு விரைவில் இறுதி செய்வோம்” என்றார்.
இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் கூறும்போது, ” 7-வது சம்பள கமிஷன் பரிந்துரையை நிறைவேற்றும் வகையில் தனியார் பொறியியல் கல்லூரிகள் கட்டண உயர்வை 25% அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தன.
பேச்சுவார்த்தை முடிவில், 10% கல்விக் கட்டண உயர்வை மட்டுமே வழங்க முடியும் என்ற அரசுத் தரப்பு நிலையை கல்லூரி நிர்வாகத்தினர் ஏற்றுக்கொண்டன” என்றனர்.
கர்நாடக அரசின் இந்த முடிவு, நீதிபதி சைலேந்திர குமார் தலைமையிலான கல்விக் கட்டண சீரமைப்பு குழுவின் அறிக்கைக்கு எதிராக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு 8% வரை கல்விக் கட்டணத்தை உயர்த்தலாம் என, கடந்த ஆண்டு அரசுக்கு இந்தக் குழு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
.