புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய்க்கும், கோவாவில் கோபி மஞ்சூரியனுக்கும் தடைவிதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தப்பட்ட கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பொது சுகாதாரத்தை கருத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை மீறினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய்கள் தரமற்று இருப்பதாகவும் மற்றும் செயற்கை வண்ணங்கள் இருப்பதாகவும் புகார் எழுந்ததை அடுத்து, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதில், கோபி மஞ்சூரியனில் இருந்து சேகரிக்கப்பட்ட 171 மாதிரிகளில், 107 மாதிரிகளில் செயற்கை வண்ணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல், 25 பஞ்சு மிட்டாய் மாதிரிகளில், 15 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன்-பி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட செயற்கை நிறமூட்டி வேதிப் பொருட்களைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை நிறங்கள் கொண்ட தின்பண்டங்களை உட்கொள்வது புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை உண்டாக்கும் அபாயம் உள்ளது. எனவே, சுகாதாரத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வேதிப் பொருள் கலக்காத நிறமற்ற பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு தடைவிதிக்கப்படவில்லை என்றபோதும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.