பெங்களூரு
ஒலிம்பிக் தங்கப் பதக்க வெற்றியாளர் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் காசிநாத் நாயக்குக்கு கர்நாடக அரசு ரூ.10 லட்சம் பரிசு என அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் பெற்றுள்ளதை மக்கள் மிகவும் கொண்டாடி வருகின்றனர். நீரஜ் தனது முதல் முயற்சியில் 87 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து இரண்டாம் முயற்சியில் 87.58 தூரத்துக்கு ஈட்டி எறிந்துள்ளார். இவருக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பரிசுகளைக் குவித்து வருகின்றனர்.
இதில் ஹரியானா முதல்வர், பஞ்சாப் முதல்வர், பிசிசிஐ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இண்டிகோ விமான நிறுவனம் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் எலான் குழுமம், மணிப்பூர் அரசு என ஏராளமானோர் பரிசு மழையில் நீரஜ் சோப்ராவை நனைத்து வருகின்றன. இந்நிலையில் கர்நாடக அரசு மற்றுமொரு பரிசை அளித்து அவர் பயிற்சியாளரை கவுரவித்துள்ளது.
நீர்ஜ் சோப்ராவின் பயிற்சியாளரான காசிநாத் நாயக் கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தின் சிர்சி நகரைச் சேர்ந்தவர் ஆவார். கர்நாடக மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் நாராயண கவுடா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அமைச்சர், “ காசிநாத் நாயக் 2010 ஆம் வருட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் பெற்ற சாதனையாளர் ஆவார். இவருடைய பயிற்சியால் தற்போது நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். எனவே கர்நாடக அரசு காசிநாத் நாயக் அளித்த பயிற்சியைப் பாராட்டி அவருக்கு ரூ.10 லட்சம் பரிசு அளித்து கவுரவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.