சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் தராதது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு வந்தது முதல், காவிரியில் முறையான அளவு தண்ணீர் திறப்பதில்லை. ஒவ்வொரு முறையும், காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழத்துக்கு தரவேண்டிய தண்ணீரை, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு திறக்க மறுத்து வருகிறது. கேட்டால், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என காரணம் கூறி வருகிறது.
இதை எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டிய திமுக அரசு, தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரும் நிலையில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக அரசை எதிர்த்து ஏததும் பேசாமல் மவுனம் சாதித்து வருகிறார். தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுவது குறித்து வாய் திறக்காமல் மவுனியாக இருந்து வருகிறார். ஆனால், முதலமைச்சருக்கு பதிலாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒவ்வொரு முறையும் கர்நாடக மாநில அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்பபோவதாக கிளிப்பிள்ளை போல பேசி வருகிறார். இது தமிழக விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 95-வது கூட்டம் காணொளி காட்சி மூலம், நடைபெற்றது. இக்கூட்டத்தில் மே மாதத்தில் தமிழகத்துக்கு தரவேண்டிய 25 டிஎம்சி நீரை தரும்படி தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், கர்நாடகாவில் வறட்சி நிலவுவதாக கூறி, தண்ணீரை தர கர்நாடகா மறுத்துவிட்டது. அதுபோல காவிரி ஆணைய தலைவர் வினித் குப்தாவும், கர்நாடகாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடுவிப்பது குறித்து ஆய்வு செய்யலாம் என கூறிவிட்டது.
இதனால், காவிரி நீரை நம்பிய டெல்டா பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, மே தின பேரணியில் பங்கேற்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் கூறிய துரைமுருகன், தண்ணீர் திறந்துவிடுவோம் என்று கர்நாடக அரசு என்றுமே கூறியதில்லை. அதிகமாக தண்ணீர் இருக்கும்போதும், குறைந்த தண்ணீர் இருக்கும்போதும் அவர்கள் அதையே கூறி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் திறந்து விட வேண்டும் என்று கூறியபோதும், திறக்க மாட்டேன் என்று கூறுகிறார்கள். எனவே, மத்திய அரசை கர்நாடக அரசு மதிக்காமல் நடந்து கொள்கிறது. இதை கேள்வி கேட்க வேண்டியது உச்ச நீதிமன்றம். அதை நாங்கள் நாடுவோம் என்று எப்போதும் போல கூறினார்.