கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் அல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மே 17ந்தேதி வரை 3வது கட்டமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் மே 4ந்தேதி முதல் கடைகள் திறப்பது உள்பட தொழில் நிறுவனங்களுக்கும் ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், முகச்சவரம் செய்யும் பார்பர் ஷாப் உள்பட சில கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுஉள்ளது.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக, கர்நாடக அரசு 1,600 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த நிவாரண நிதியானது விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கைத்தறி நெசவாளர்கள், பூ வளர்ப்பவர்கள், துணி துவைப்பவர்கள், முடி திருத்துபவர்கள், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மலர் பயிடும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு 25,000 ரூபாய் நிவாரணம் ,
துணி துவைப்பவர்கள் மற்றும் முடி திருப்பவர்களுக்கு 5,000 ரூபாய்
ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு 5,000 ரூபாய்
கட்டுமானத் துறையில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாய் (ஏற்கனவே 2,000 ரூபாய் கொடுக்கப்பட்டது.) கொடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கைவினைப் பொருட்களை உருவாக்கும் ஊழியர்களுக்கும் 2,000 ரூபாய்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, கொரோனாவின் தாக்கம் விவசாயிகள் மட்டமின்றி, கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள், முடி திருத்துபவர்கள், துணி துவைப்பவர்களையும் பாதித்துள்ளது. அவர்களுக்கு 5,000 ரூபாய் கொடுக்க அரசு முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம் 60,000 துணி துவைப்பவர்கள் பயனடைவார்கள். அதேபோல 2,30,000 முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள், கைவினைப் பொருட்களை உருவாக்கும் ஊழியர்களுக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் 2,000 ரூபாய் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, மேலும் இரண்டு மாதங்கள் மின்சார கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
பெரிய நிறுவனங்களின் மின்சாரக் கட்டணங்கள் இரண்டு மாதங்களுக்கு வசூல் செய்யப்பட மாட்டாது என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.