டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், கர்நாடக மாநில அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உச்சநீதிமன்றத்தல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு மாதம்தோறும் தர வேண்டிய காவிரி நீரை, கர்நாடக அரசு திறந்துவிட மறுத்து வருகிறது. இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்த காங்கிரஸ் மாநில அரசு மறுத்து வருகிறது. இதனால், தமிழகஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏற்றுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைத்து, நாளை (ஆகஸ்டு 25ந்தேதி) விசாரணை நடத்தும் என அறிவித்து உள்ளது.
அதன்படி காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் கர்நாடக அரசின் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், தமிழ்நாடு அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டியது இல்லை. காவிரியில் இருந்து திறக்கப்பட்ட நீரை தமிழ்நாடு அரசு முறையாக பயன்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளதுடன், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் கர்நாடக அரசு அமல்படுத்தி வருகிறது என்று க தெரிவித்துள்ளது.
முன்னதாக, காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில், அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர்கள் குமாரசாமி, பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தகவுடா, முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகள், பெங்களூரு எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட எம்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காவிரி பிரச்சினையில் பிரச்சனையில் பிரதமரை சந்தித்து முறையிலாம் என்று முடிவு செய்தனர். மேலும் கர்நாடகா அரசு எடுக்கும் முடிவினை ஆதரிப்பது என்றும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.
இதனிடையே காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு குறித்து நாளை உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உள்ள நிலையில், விசாரணையின்போது கர்நாடகம் சார்பில் எந்த மாதிரியான அம்சங்களை எடுத்து வைப்பது என்பது குறித்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று பிரம்மாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.