சேலம்: கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழக மீனவர் உடலை மீண்டும் உடற்கூறாய்வு செய்ய அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் தமிழ்நாடு – கர்நாடக எல்லையான அடிபாலாறு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அங்கு மீன் பிடிக்க தொடர்ச்சியாக கர்நாடக வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதியில் மீன் பிடித்த தமிழக மீனவர் பழனி என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கர்நாடக மாநில காவல்துறை இப்போது மீண்டும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் கொளத்தூர் காரைக்காடு ராஜா என்பவர் உயிரிழந்துள்ளார். ஆனால், மான் வேட்டையாட வந்தவர்களைத்தான் துப்பாக்கியால் சுட்டதாக கார்நாடக வனத்துறை தெரிவித்து உள்ளது.
ஆனால் சம்பவத்தன்று, வழக்கம்போல் மீன்பிடிக்க சென்ற செட்டிப்பட்டி ரவி உள்ளிட்டோருடன் காரைக்காடு ராஜாவும் மீன் பிடிக்க சென்றுள்ளார். அடிபாலாறு பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் இருந்து தப்பித்த அனைவரும் வீடு வந்து சேர்ந்த நிலையில் ராஜா மட்டும் வீடு திரும்பவில்லை.
அவரை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் அவரின் உடல் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்களுடன் பாலாற்றில் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ராஜாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாநில எல்லைகளிலும் அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் ராஜாவின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராட்த்மதில் இறங்கினர். இதையடுத்து, அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ராஜாவின் உடலை தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் உடலை பிரேதப் பரிசோதனை செய்யும்போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ரூ.50லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச்செல்வதாக கூறிய அதிகாரிகள், உடற்கூறாய்வு செய்வதை ஒப்புக்கொள்வதாக தெரிவித்து உள்ளனர்.