பெங்களூரு:

கடன் ரத்து செய்யப்பட்ட 13 ஆயிரம் கர்நாடக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் போடப்பட்ட பணம் மாயமானது.


கர்நாடக மாநிலம் காலபர்கி மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதான விவசாயி சிவப்பா ஜெயி.
கடந்த ஏப்ரல் மாதம் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்தபடி, இவர் வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டது.

ஆனால், மக்களவை தேர்தல் முடிந்தபிறகு, அவர் வங்கிக் கணக்கிலிருந்த பணம் மீண்டும் கர்நாடக அரசுக்கே சென்றது.

வங்கிக்கு விரைந்து சென்று இது குறித்து சிவப்பா விசாரித்தார். உங்கள் வங்கிக் கணக்கில் இருந்த பணம் மாநில அரசுக்கே திரும்பிச் சென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி சிவப்பா வங்கிக் கணக்கில் அரசு ரூ.50 ஆயிரம் டெபாஸிட் செய்தது. மீண்டும் ஏப்ரல் 17&ம் தேதி ரூ. 43,535 டெபாஸிட் செய்யப்பட்டது.

இதன்மூலம் தான் வாங்கிய கடன் தள்ளுபடி ஆகிவிட்டது என்று சிவப்பா மகிழ்ச்சியடைந்தார்.
திடீரென ஜுன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சிவப்பா வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 93,535 காணாமல் போனது.

இது குறித்து சிவப்பாவிடம் விளக்கம் அளித்த சம்பந்தப்பட்ட வங்கி, விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்து போடப்பட்ட தொகையை மீண்டும் அரசு கணக்குக்கு மாற்ற அனைத்து வங்கிகளுக்கும் மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியதாக தெரிவித்தனர்.

சிவப்பா கணக்கில் இருந்து மட்டும் பணம் எடுக்கவில்லை. கர்நாடகாவில் 13 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் போடப்பட்ட பணம் மாயமானது.

தேர்தலில் வாக்குகளை பெறும் நோக்கில் தான் வங்கிகளில் பணத்தைபோட்டு, பின் திரும்ப எடுத்துக் கொண்டனர் என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

காங்கிரஸ்-மத சார்பற்ற ஜனதா தளத்துக்கு வாக்களிக்காத பகுதிகளில் உள்ள விவசாயிகளின் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினர்.

வட கர்நாடக மக்கள் எப்போதுமே மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
அவர்கள் பாஜகவுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். இதுதான் பழிவாங்கும் முறையா என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

வங்கியிலிருந்து பணம் மாயமானதை மாநில அரசு மறுக்கவில்லை. எனினும், வங்கிகளையும் மத்திய அரசையும் மாநில அரசு  குறை கூறியுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, இது பற்றி விவாதிக்க அனைத்து வங்கிகள் கூட்டத்தை ஜுன் 14-ம் தேதி கூட்டியுள்ளேன்.

பணம் திரும்ப அரசின் கணக்குக்கு எப்படி வந்தது என்பது குறித்து வங்கிகளிடம் விளக்கம் கேட்கப்படும்.
இந்த பிரச்சினை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மட்டுமே நடந்துள்ளது. இதற்கு மத்திய அரசே காரணம்.

தேர்தல் முடிந்ததும், விவசாயிகள் வங்கிக் கணக்கில் டெபாஸிட் செய்த பணத்தை அரசு திரும்பப் பெற்றதாக காலையிலிருந்து மீடியாக்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இதனால் உங்களுக்கு என்ன லாபம்? இந்த பிரச்சினை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நடந்துள்ளது.
தினமும் மோடிக்கு புகழ்பாடும் ஊடகங்கள், இது பற்றி ஏன் அவரிடம் கேள்வி கேட்கவில்லை என்றார்.

கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் இது குறித்து கூறும்போது, மாநில அரசின் கருவூலகத்துக்கு பணத்தை திரும்ப அனுப்புமாறு வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட தாலுகா கமிட்டியின் ஒப்புதலுக்குப் பின்னரே, கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பணம் விவசாயி கணக்கில் செலுத்தப்பட்டது. பணம் திருப்பி அனுப்பப்பட்டது விவசாயிகளுக்கு தெரியாமல் நடந்திருக்காது என்றனர்.

விவசாயி, அவரது மனைவி மற்றும் குழந்தைக்கு என மொத்தமாக கணக்கிட்டு, கடன் தள்ளுபடி செய்யப்பட்டு ஒரு குடும்பத்துக்கு, ரூ.2 லட்சம் செலுத்தப்பட்டது.

2019-20 பட்ஜெட்டிலும் இதற்காக 6,893 கோடி ஒதுக்கப்பட்டது. கடன் தள்ளுபடி செய்து விவசாயிகள் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை ரூ.37,159. இதனால் 40 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர்.

தேவையான ஆவணங்களை விவசாயிகள் அப்லோடு செய்தபின், விவசாயிகளுக்கு ஒப்புகை சீட்டு வரும்.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை தாலுகா கமிட்டி பரிசீலித்து விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை முடிவு செய்யும்.

தகுதியான விவசாயிகள் பட்டியல் வங்கிக்கு அனுப்பப்படும். பின்னர் பணத்தை செலுத்த அரசுக்கு வங்கிகள் வேண்டுகோள் விடுக்கும்.

அதன்பின்னர் அரசு வங்கிகளில் விவசாயிகளின் கணக்கில் பணத்தை டெபாஸிட் செய்யும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.