கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2018 தேர்தலில் 104 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக இந்த முறை 65 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் துடைத்தெறியப்பட்டுள்ளது.
பாஜக முக்கிய வேட்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரும் தோல்வியை சந்தித்து வருகின்றனர்.
சிக்மங்களூர் தொகுதியில் இருந்து 2004 முதல் தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹெச்.டி. திம்மைய்யா-வை விட 4000 வாக்குகள் குறைவாகப் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
2024 பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்திருப்பதை அடுத்து அவசர நடவடிக்கைகளில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.
பாஜக-வின் இந்த படுதோல்வியை அடுத்து அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறார்.
அண்ணாமலை வருகைக்குப் பிறகு பாஜக-வுக்கு அரோகரா சொல்லி அக்கட்சியில் இருந்து வெளியேறிய ஜெகதீஷ் ஷெட்டர், “எந்த ஒரு தேர்தலிலும் ஜெயிக்காத ஒருவர் கட்சியினரை தவறாக வழிநடத்துவதோடு தேவையில்லாத ஆணியை பிடுங்குகிறார்” என்று அண்ணாமலை மீது குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.