பெங்களூரு
கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என மறுத்துள்ளார்.
ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவு, காவிரி மேலாண்மை ஆணையம் வாயிலாக முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி நீரில், 2.25 டிஎம்சி மட்டுமே கிடைத்தது., இம்மாதம், 31.2 டிஎம்சி நீர் திறக்க வேண்டிய நிலையில், 9-ம் தேதி வரை, 1.99 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டது..
நேற்று காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம் வினீத் குப்தா தலைமையில்‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சார்பில், காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் பங்கேற்று குடிநீர் தேவைக்காக, நிலுவை நீரை விடுவிக்க வலியுறுத்தினர். இதையொட்டி காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைவர், இம்மாதம் இறுதி வரை தமிழ்நாட்டிற்கு நாள்தோறும், 1 டிஎம்சி நீர் திறக்க உத்தரவிட்டார்.
இன்று (ஜூலை 12) கர்நாடகா முதலமைச்சரின் கிருஷ்ணா இல்ல அலுவலகத்தில் நட்ந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடகா முதவர் சித்தராமையா, துணை முததல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், கூடுதல் தலைமைச் செயலாளர் எல்.கே.ஆதிக் மற்றும் காவிரி பாசன பகுதி அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க முடியாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க வரும் நாளை மறுநாள் (ஜூலை 14) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.