பெங்களூரு:

ரபரப்பான கர்நாடக அரசியல் சூழ்நிலையில் இன்று  கர்நாடக சட்டப்பேரவை கூடுகிறது.  இந்த சட்டப்பேரவை கூட்டத்தில், கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுள்ள எச்.டி.குமாரசாமி பெரும்பான்மைய நிரூபிக்க இருக்கிறார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், 104 இடங்களை பிடித்திருந்த பாஜவை ஆட்சி அமைக்க அழைத்து, எடியூரப்பாவை முதல்வராக பதவி ஏற்க வைத்து, அவருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமும் கொடுத்திருந்தார் கவர்னர் வஜுபாய் வாலா.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காங்கிரஸ் மற்றும், ஜேடிஎஸ் கட்சிகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக, எடியூரப்பாவை கடந்த 19ந்தேதி பெரும்பான்மை நிரூபிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்ற காரணத்தால், எம்எல்ஏக்களாக பதவி ஏற்றவுடன், சட்ட மன்றத்தில் உரையாற்றிவிட்டு எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கோரிய மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமார சாமியை பதவி ஏற்க கவர்னர் அழைத்தார். அதை ஏற்று கடந்த 23ந்தேதி அகில இந்திய காங். தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சி மாநில முதல்வர்கள், அனைத்துக்கட்சி தலைவர்கள் முன்னிலை யில் குமாரசாமி மாநில முதல்வராகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வரா துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று கர்நாடக சட்டமன்ற கூடுகிறது. இன்றைய கூட்டத்தின் கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானம் தாக்கல் செய்கிறார். அதைத்தொடர்ந்து ஓட்டெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று சட்டசபை கூடியதும், சட்டசபை சபாநாயகர், துணைசபாநாயகர் தேர்வு நடைபெறும். அதன் பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்.