‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த  ஆண்டி ‘என்ற பழமொழி கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவுக்கு கச்சிதமாக பொருந்தும்.

ரேவண்ணா –கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

டெல்லியில் அவர் மகளிர் தினத்தன்று அளித்த பேட்டி கர்நாடகாவில் கொந்தளிப்பை எற்படுத்தி யுள்ளது.

நடிகை சுமலதாவின் கணவரான அம்பரீஷ்- காங்கிரஸ் சார்பில் மாண்டியா மக்களவை தொகுதி யில் போட்டியிட்டு 3 முறை எம்.பி.ஆனவர். அவர் மரணம் அடைந்த நிலையில் அந்த தொகுதியில் சுமலதா போட்டியிட வேண்டும் என்பது  -அம்பரீஷ் ரசிகர்கள் விருப்பம்.

காங்கிரஸ் ஆதரித்தால் போட்டியிடலாம் என்பது சுமலதா திட்டம். ஆனால் அவரை ஆதரிக்க காங்கிரஸ் மறுத்து விட்டது.

அந்த தொகுதியில் ஆளும் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் முதல்-அமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட உள்ளார்.

அவரை எதிர்த்து சுமலதா போட்டியிடும் பட்சத்தில்- நிகில் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறிதான்.

இந்த நிலையில்- குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா அளித்துள்ள பேட்டி –கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘’கணவர் இறந்து ஒரு மாதம் கூட முடியாத  நிலையில் எம்.பியாக ஆசைப்பட்டவர் சுமலதா. சினிமாவில் நடித்ததுபோல் அரசியலிலும் நடிக்கிறார்-சுமலதா’’ என்று ஆவேசப்பட்டு மேலும் சில வார்த்தைகளையும் பிரயோகம் செய்துள்ளார்.-

இதனால் அம்பரீஷ் ரசிகர்கள் கொதித்து போய் உள்ளனர். பா.ஜ.க .உள்பட அனைத்து கட்சிகளும் ரேவண்ணாவை கண்டித்துள்ளன.

காங்கிரஸ் ஆதரிக்காததால்- தேர்தலில்  நிற்க வேண்டுமா என்று யோசித்த சுமலதா-

ரேவண்ணாவின் பேட்டிக்கு பின் -நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

நேற்று அவர் பாஜ.க.தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். மாண்டியா தொகுதியில் சுமலதா- பா.ஜ.க ஆதரவுடன் போட்டியிடுவார் என்றே தெரிகிறது.

நிகில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே –சுமலதாவை ரேவண்ணா உசுப்பேற்றி இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

-பாப்பாங்குளம் பாரதி