பெங்களூரு
கர்நாடக மாநிலத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்தி உள்ளனர்.
அமைச்சரவை முடிவின்படி கர்நாடக மாநிலத்தில் பேருந்து கட்டணம்15% உயர்த்தப்பட உள்ளது. அதாவது கர்நாடகத்தில் குறைந்தபட்சமாக பஸ் கட்டணம் ரூ.2 உயர்வதால் பெங்களூருவில் இயங்கும் பி.எம்.டி.சி. பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட உள்ளது.
நாளை மறுநாள் முதல் இந்த பேருந்து கட்டண உயர்வு பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அமலுக்கு வருகிறது. பாஜக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் பேருந்து கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளன.
இன்று பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ஆர்.அசோகன் தலைமையில் பாஜகவினர் மெஜஸ்டிக்கில் உள்ள கெம்பே கவுடா பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். .ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவின் ஆர் அசோகன் அப்போது செய்தியாளர்களிடம், ஏற்கனவே மாநிலத்தில் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுவதாகவும்.பேருந்து கட்டண உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.