பெங்களூரு
கர்நாடக மாநில இடைத்தேர்தலில் அத்தானி மற்றும் கோகாக் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து அக்கட்சியினரே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின்14 சட்டப்பேரவை உறுப்பினர்களும் 3 மஜத உறுப்பினரும் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் காங்கிரஸ் – மஜத கூட்டணி அரசு கவிழ்ந்தது. இந்த 17 உறுப்பினர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செல்லும் எனத் தீர்ப்பு அளித்தது.
இந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் தற்போது பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு இடைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்துள்ளது. இதில் அத்தானி தொகுதியில் கர்நாடக அரசின் துணை முதல்வர் லட்சுமண் சாவடி போட்டியிட இருந்த நிலையில் தற்போது கட்சியின் இணைந்துள்ள மகேஷ் குதமல்லி வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதைப் போல் கோகாக் தொகுதியில் அசோக் புஜார் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி லட்சுமண் சாவடி மற்றும் அசோக் புஜாருக்கு எதிராகப் போராட்டங்களை அவர்கள் ஆதரவாளர்கள் நிகழ்த்தி வருகின்றனர். இதனால் பாஜக வில் கடும் பரபரப்பு உண்டாகி இருக்கிறது.
போராட்டக்காரர்களில் ஒருவர் ”இவர்கள் அனைவரும் பிரதமர் மோடியையும் முதல்வர் எடியூரப்பாவையும் எதிர்த்து பிரசாரம் செய்தவர்கள். இவர்களுக்கு எதிராக நாங்கள் எவ்வாறு தேர்தல் பணி புரிய முடியும்? எது வந்தாலும் நாங்கள் அவருக்கு ஆதரவாகப் பணி புரிய மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் லட்சுமண் சாவடி,”நான் பாஜகவின் உண்மையான தொண்டர். எனக்குக் கட்சித் தலைமை அத்தானி மற்றும் கோகாக் தொகுதியில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க உத்தரவிட்டுள்ளது. எனது ஆதரவாளர்கள் எனக்கு வாய்ப்பு அளிக்காததை மனதில் கொள்ளாமல் பாஜக வெற்றிக்குப் பாடுபட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோகாக் தொகுதியில் பாஜகவின் அசோக் புஜாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட ரமேஷ் ஜாரிகிகோலிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அசோக் புஜார் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை அசோக் புஜார் மற்றும் மஜத தரப்பினர் உறுதி செய்யவில்லை.