பெங்களூரு:

மத மோதலை உருவாக்கும் வகையில் கருத்து தெரிவித்த கர்நாடகா பாஜக பெண் எம்.பி. மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநில பாஜக எம்.பி.யாக இருப்பவர் சோபா காரன்ட்லஜி. இவர் கடந்த 14ம் தேதி டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், ‘‘உத்தர கன்னடா மாவட்டம் ஹானாவர் நகரை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை ஜிகாதிகள் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து கொலை செய்து விட்டார்கள். ஏன் இந்த அரசு மவுனமாக இருக்கிறது.

சிறுமியை காயப்படுத்திய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். முதல்வர் சித்தராமையா எங்கே இருக்கிறார்?. அந்த, இந்து சிறுமியை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று தாக்கியதோடு கையையும் அறுத்துவிட்டு சென்றுவிட்டனர்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது. சிறுபான்மை மக்களை குறிவைத்து தாக்குதல் நடந்தது. பின்னர் போலீசார் தலையிட்டு அமைதி ஏற்படுத்தினர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறுமி ஒரு வாலிபருடன் பழகி வந்துள்ளார். அதை குடும்பத்தார் கண்டித்துள்ளனர். இதனால் அவர் தனது கையை தானே அறுத்துக் கொண்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து இஸ்லாமிய மக்களுக்கு எதிராக இந்துக்களை தூண்டிவிட்டு மத மோதலை ஏற்படுத்தியதாக எம்.பி மீது போலீசார் சுயமாகவே வழக்குப் பதிவு செய்துள்ளனர்.