திருவனந்தபுரம்: கர்நாடகாவில் கேரள மாநில மக்கள் நுழைய தடை அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக அந்த மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை கர்நாடகா விதித்து உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட பல சாலைகளை கர்நாடக அதிகாரிகள் நேற்று முதல் சீல் வைத்துள்ளனர்.
கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் உள்ளவர்களுக்கு மட்டும் எல்லையில் நுழைய அனுமதி என்றும் கர்நாடகா அறிவித்தது. இந் நிலையில், பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
கேரள மாநில மக்களுக்கு கர்நாடகா பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் எதிரொலியாக மாணவர்கள், மருத்துவ உதவிக்காக செல்பவர்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கர்நாடகா செல்பவர்கள் சிரமம் அடைந்து உள்ளனர்.
இந்த தடையானது, எல்லைகளுக்கு இடையேயான போக்குவரத்து செயல்பாடுகளுக்கு மத்திய அரசு அளித்த தளர்வுகளை மீறுவதாக உள்ளது. எனவே உடனடியாக தலையிட்டு தடைகளை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.