கர்நாடகாவில் ஹீக்கா பார் மற்றும் ஹீக்கா விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

புகையிலையை நேரடியாக குழாய்வடிவ குடுவையில் போட்டு புகைப்பது தான் இந்த ஹீக்கா. இது சிகரெட் பிடிப்பதை விட உடலுக்கு பலமடங்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.

கர்நாடகாவில் ஹீக்கா பார் மூலம் தொடங்கிய இந்த கலாச்சாரம் தற்போது காபி பாருடன் இணைந்த ஹீக்கா பாராக வீதிக்கு வீதி வந்துள்ளது.

இளைஞர்கள் பலரும் இதற்கு அடிமையாவதுடன் மேலும் பலரை அடிமைப்படுத்த புகையிலையில் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கலந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.

இதனால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் ஏற்படக்கூடும் அபாயம் அதிகரித்துள்ளது.

இருந்தபோதும் இளைஞர்கள் பலர் இந்த ஹீக்காவுக்கு அடிமையாகி தங்கள் வாழ்வை இழந்து வருவதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக சுகாதாரத் துறை இதற்கு தடை விதித்தது.

இந்த நிலையில் ஹீக்கா பார் மற்றும் ஹீக்கா விற்பனைக்குத் தடைவிதிக்கும் சட்டத்தை கர்நாடக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.

தடையை மீறி ஹீக்கா விற்பனை செய்பவர்களுக்கு ஒன்று முதல் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

பான் மசாலா, ஹீக்கா தவிர பாங்கு என்ற போதை பொருளுக்கும் இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர் குறிப்பாக வடமாநிலங்களில் அரசு அனுமதியுடன் இந்த பாங்கு பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆடு பகை குட்டி உறவு என்பது போல், கஞ்சா செடி வளர்ப்பது மற்றும் கஞ்சா விற்பனை தண்டனைக்குரிய குற்றம் என்றபோதிலும் கஞ்சா துணை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பாங்கு என்ற போதை வஸ்து மதுவை விட பலமடங்கு அதிகமாக இளைஞர்களை குறிப்பாக வடஇந்திய இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பது வேதனையான உண்மை.