கர்நாடக அரசு பேருந்து ஓட்டுனரை மராத்தியில் பேச சொன்ன சம்பவத்தை அடுத்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே மோதல் வெடித்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்து இயக்கம் ஒரு சில நாட்கள் தடைபட்டது.

இது தொடர்பாக கர்நாடக பந்திற்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த கன்னட கூட்டமைப்புத் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் கன்னட அமைப்புகள் இன்று வாட்டாள் நாகராஜ் தலைமையில் கர்நாடக பந்த் குறித்து ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜ், “திட்டமிட்டபடி மார்ச் 22ம் தேதி கர்நாடக பந்த் நடைபெறும்”.

மார்ச் 22 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நிச்சயமாக நடைபெறும் என்றும் காலை 10:30 மணிக்கு டவுன் ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை போராட்ட பேரணி நடத்துவோம் என்றும் அவர் கூறினார்.

மேலும், அன்றைய தினம் யாரும் வெளியில் வர வேண்டாம் என்றும் பேருந்து, மெட்ரோ போன்ற சேவைகளை நிறுத்த வேண்டும் என்றும் கன்னட மக்களின் சுயமரியாதைக்காக நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு கர்நாடக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.