பெங்களூரு:
கர்நாடகா சட்டமன்ற மேல்சபையில் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதற்கான தேர்தல் 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பா.ஜ.க. சார்பில் ரவிகுமார், தேஜஸ்வினி கவுடா, ரகுநாத் ராவ் மல்காபுரே, கே.பி.நஞ்சுன்டி, ருத்ரே கவுடா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். காங்கிரஸ் சார்பில் இபுராகிம், கோவிந்தராஜ், அரவிந்த் குமார், ஹரிஷ் குமார், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் பாரூக், பைரே கவுடா ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களை எதிர்த்து போட்டியிட யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து 11 பேரும் மேல்சபைக்கு இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் ரகுநாத் ராவ் மல்காபுரே, இபுராகிம், கோவிந்தராஜ் ஆகியோர் தற்போது மேல்சபை உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.