உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் சரிக்குச் சரி மோதிக்கொண்டிருந்த கொல்கொத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், மனதளவில் இப்போது “சரண்டர்” ஆகியிருக்கிறார். “நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் தெரிவித்ததற்காக கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தானாக முன்வந்து பதிவு செய்துள்ளது உச்சநீதிமன்றம். இதற்கிடையே கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய, உச்சநீதிமன்றம் உத்தரவிட, கர்ணன் மறுக்க.. அவருக்கு அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
இதையடுத்து அவரைக் கைது செய்ய, கொல்கொத்தா போலீசார் சென்னை வந்தனர். கர்ணன் தலைமறைவாகிவிட்டதால், அவரைத் தேடி ஆந்திராவரை சென்று வெறுங்கையுடன் திரும்பினர்.
இந்த நிலையில் கர்ணனின் வழக்கறிஞர் ராஜகோபால், கர்ணனுக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனைக்கு தடை கோரும் மனுவை தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி கேஹர் முன்னிலையில் இந்த மனுவை அவர் தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை அவசரமாக விசாரித்த உச்சநீதிமன்றம், கைது உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதற்கிடையே கர்ணனின் வழக்கறிஞர் கூறுகையில், “நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க கர்ணன் தயாராக இருக்கிறார். ஆனால், அவரது வேண்டுகோளை, நீதிமன்ற பதிவாளர் ஏற்க மறுக்கிறார்” என்று புகார் தெரிவித்தார். மேலும் அவர், “1971ம் ஆண்டின் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ், அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளானவர் மன்னிப்பு கேட்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றம் கர்ணனின் மன்னிப்பை ஏற்காததால், அவர் மீதான கைது நடவடிக்கை தொடர்கிறது. கொல்கத்தா காவல்துறை கர்ணனனை வலைவீசி தேடி வருகிறது.