மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’. கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கொடியன்குளம் சம்பவம், 1995-ல் (ஜெயலலிதா ஆட்சியில்) நடந்ததாகவும் அதனைத் தவறாக 1997 -ல் (கலைஞர் ஆட்சியில்) நடந்துள்ளதைப் போல சித்தரித்துள்ளதாவும் கூறி விமர்சனம் எழுந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தனது சமூக வலைதளப் பக்கத்தில், “1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. இதனைத் தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர். நன்றி!” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று கர்ணன் படத்தில் காட்டப்பட்ட கொடியன்குளம் நிகழ்வு, ‘1997-ன் முற்பகுதியில்’ என்பதில் இருந்து ‘1990களின் பிற்பகுதியிலிருந்து’ என மாற்றப்பட்டுள்ளது.