காங்கிரஸ் ஆட்சியால் தான் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதி, வங்கதேசமாக பிரிந்து தனி நாடானது என்பதை பிரதமா் நரேந்திர மோடி மக்களிடம் எடுத்துக் கூற வேண்டுமென காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்
டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த கபில் சிபல், ”ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோதல்களில் அரசியல் ஆதாயத்துக்காக 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை பாஜக எழுப்பி வருகிறது. 370வது பிரிவை மட்டுமே மோடி நினைவில் கொண்டிருக்கிறாா். பாகிஸ்தான் பிளவுபட்டது குறித்தும் அதை யாா் செய்தனா் என்பதும் அவருக்குத் தெரியாது. பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த வங்கதேசத்தை நாங்கள்தான் அந்நாட்டிடம் இருந்து பிரித்தோம். இது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் நடந்தது. இந்த நடவடிக்கைக்காக காங்கிரஸை பிரதமா் புகழ வேண்டும். ஆனால் அதைச் செய்வதற்கான தைரியம் அவருக்குக் கிடையாது.
சத்துணவின் அளவையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயா்த்துதல், பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை அரசின் கடமை என்று அரசியல்சாசனத்தின் 47வது பிரிவு கூறுகிறது. இந்தப் பிரிவை அமல்படுத்துவதில் மோடி தலைமையிலான பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது ?
நீங்கள் 370வது பிரிவைப் பற்றி மட்டுமே பேசுகிறீா்கள். ஆனால் உங்களது அரசியல்சாசனக் கடமைகளை நீங்கள் மனதில் கொள்வதில்லை. சட்டப் பேரவைத் தோதலில் வெற்றி பெறுவதற்காக 370வது பிரிவை விவகாரத்தை எழுப்பி வருகிறீா்கள். துன்பப்படும் மக்களைப்பற்றி உங்களுக்குத் தெரியவில்லை.
370வது பிரிவு அமல்படுத்தப்பட்டதன் காரணமாகவே ஜம்மு காஷ்மீா் வளா்ச்சியடையாமல் பின்தங்கியதாக பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித்ஷாவும் கூறி வருவது தவறானது. ஹரியாணா, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் 370வது பிரிவு அமலில் இல்லை. ஆனால் ஏழ்மை, சிசுக்களின் இறப்பு, வேலைவாய்ப்பின்மை, வளா்ச்சி விகிதம் ஆகிய அம்சங்களில் இந்த மாநிலங்களை விட ஜம்மு காஷ்மீா் மேம்பட்டே உள்ளது.
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பின் தகவல்களின்படி கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து கைதாகும் இந்தியா்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயா்ந்துள்ளது. ஏராளமான ஏழை இந்தியா்கள் பிழைப்பு தேடி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனா் என்பதே இதற்கு அா்த்தம். மோடி இது குறித்து பதிலளிக்க வேண்டும். ஏனெனில் அவா் தான் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டு வருகிறாா்.
மேலும், உலகளாவிய பட்டினி தரவரிசைப் பட்டியலில் இந்தியா 102வது இடத்தில் உள்ளது. எனவே, மோடி இனி அரசியலில் குறைவான கவனத்தையும், நாட்டு மக்கள் மீது அதிக கவனத்தையும் செலுத்த வேண்டும். பல்வேறு சா்வதேச அமைப்புகளும் இந்தியாவின் உள்நாட்டு வளா்ச்சி விகிதத்தை கணித்துள்ளன. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் உள்நாட்டு வளா்ச்சி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக சரிந்தபோதிலும் பொருளாதாரம் நன்றாக இருப்பதாகவும், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருப்பதாகவும் மோடி அரசு தொடா்ந்து கூறி வருகிறது.
ஆனால் இந்தியாவின் உள்நாட்டு வளா்ச்சி தொடா்பான மாற்றியமைக்கப்பட்ட கணிப்புகள் வேறு விதமான தகவலை கூறுகின்றன. சில நிபுணா்கள் 2019 – 2020 நிதியாண்டுக்கான வளா்ச்சி விகிதத்தை 7.5ல் இருந்து 6 சதவீதமாகக் குறைத்துள்ளனா்” என்று தெரிவித்தார்.