டில்லி
பாபர் மசூதி வழக்கில் இருந்து காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல் விலகி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த ராஜ்யசபை உறுப்பினரான கபில் சிபல் பாபர் மசூதி வழக்கில் இக்பால் அன்சாரிக்காக கட்டணம் வாங்காமல் வாதாடி வருகிறார். இக்பால் அன்சாரியின் தந்தை மறைந்த ஹசிம் அன்சாரி முதன் முதலில் இந்த வழக்கை தொடுத்தவர்களில் ஒருவர் ஆவார். கடந்த பத்தாண்டுகளாக இந்த வழக்கில் வாதாடி வரும் கபில்சிபல் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வழக்கு விசாரணையில் கலந்துக் கொள்ளவில்லை.
கபில் சிபல் ராஜ்யசபையில் உறுப்பினராக உள்ளதால் அவர் நிதிநிலை அறிக்கைத் தொடரில் கலந்துக் கொண்டுள்ளதாக அப்போது காரணம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தில், “கபில் சிபல் இந்த வழக்கில் இருந்து விலகுகிறார். இனி அவர் எந்த விசாரணையிலும் கலந்துக்கொள்ள மாட்டார். அவருக்கு பதிலாக ராஜீவ் தவான் இந்த வழக்கில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வாதாடுவார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் என்னவென்று குறிப்பிடாத போதிலும் காங்கிரஸ் கட்சியின் எண்ணப்படியே அவர் வழக்கில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, “என்னையும் எனது மகனும் தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவர்கள் என பாஜக பொய் பிரசாரம் செய்து வருகிறது. அதை முறியடிக்கவே தற்போது கோவில்களுக்கு சென்று வருகிறோம். காங்கிரஸை பொறுத்த வரையில் கட்சியில் இந்துக்களும் இஸ்லாமியரும் சமமாகவே நடத்தப்படுகின்றனர்” எனக் கூறி இருந்தார்.
இந்நிலையில் கபில் சிபல் இந்த வழக்கில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வாதாடி வருவது கட்சியின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராகும் என கட்சி கருதுவதாக கூறப்படுகிறது. அத்துடன் கபில் சிபல் நீதிமன்றத்தில் தனது கட்சிக்காரரான இஸ்லாமியருக்கு ஆதரவாக தெரிவிக்கும் கருத்துக்களை கட்சியின் கருத்துக்களாக கூறி கட்சியை இந்துக்களுக்கு எதிரான கட்சி என பாஜக கூறலாம் என்னும் சந்தேகமும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதனால் அவர் இந்த வழக்கில் இருந்து விலகி இருக்கலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.