டெல்லி: சோனியாகாந்தி தலைமையிலான அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து, மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கபில்சிபல் விலகி உள்ளார். இதையடுத்து, அவர் முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து, அக்கட்சி சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். இது காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
100ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக வரலாறு காணாத தோல்வியை சந்தித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியை பறிகொடுத்துவிட்டு, பரிதாபமான நிலையில் உள்ளது. கட்சியில் உள்ள கோஷ்டிகளே கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. அதுபோல, கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முன்னாள் அமைச்சர் கபில்சிபல் தலைமையில் ஒன்றுகூடி, சோனியாவுக்கு கடிதம் எழுதினர். இது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததும் விமர்சனங்களை எழுப்பியது.
அதைத்தொடர்ந்து, கபில்சிபல் தலைமையில் அதிருப்தி தலைவர்கள் மீண்டும் கூடி விவாதித்தனர். அப்போது பேசிய கபில்சிபல், ‘காந்தி – நேரு குடும்பத்தினர் அவர்களாகவே கட்சித் தலைமை பொறுப்பிலிருந்து விலக வேண்டும். ஏனென்றால் அவர்களால் உருவாக்கப்பட்ட காரியக் கமிட்டிக் குழு, ஒருபோதும் உங்களைத் தலைமைப் பொறுப்பில் வைத்துக்கொண்டு செயல்பட முடியாது என்று கூறாது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இல்லாவிட்டாலும் அவர்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். ராகுல் காந்தி பஞ்சாப்புக்குச் சென்று சரண்ஜித் சிங் சன்னிதான் முதல்வராக இருப்பார் என்று அறிவிக்கிறார். அவருக்கு என்ன பொறுப்பு இருக்கிறது. அவர் ஒன்றும் கட்சியின் தலைவர் கிடையாது. ஆனால், அவர்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். அனைவருக்கான காங்கிரஸாக இருக்கவேண்டும் என்று என் கடைசி மூச்சுவரை போராடுவேன்’ என கூறியிருந்தார்.
இந்த நிலையில், கபில் சிபல் திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். அதைத்தொடர்ந்து, மாநிலங்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் கபில் சிபல். சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
கபில்சிபல் காங்கிரசில் இருந்து விலகியுள்ளது, காங்கிரசுக்கு மேலும் பின்னடைவை எற்படுத்தி உள்ளதுடன், கட்சியின் மற்ற தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், கபில் சிபல் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் என்றும், சமாஜவாதி ஆதரவுடன் ராஜ்யசபா செல்கிறார். இன்னும் ரெண்டு பேர் ஹவுஸ் போகலாம். கபில் சிபல் மூத்த வழக்கறிஞர். அவர் தனது கருத்துக்களை நாடாளுமன்றத்தில் சிறப்பாக முன்வைத்துள்ளார். சமாஜ்வாதி கட்சி மற்றும் தன்னைப் பற்றிய இருவரின் கருத்துக்களையும் அவர் முன்வைப்பார் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, சமாஜ்வாதி ஆதரவுடன் ராஜ்யசபா வேட்புமனுவை நிரப்பிய கபில் சிபல் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அக்கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை கபில் சிபல் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கபில்சிபல், செய்தியாளர்களை சந்தித்தபோது, காங்கிரஸ் கட்சியில் இருந்து மே 16ம் தேதி ராஜினாமா செய்தேன் என்று கூறியதுடன், இன்று, சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன், ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தேன் என்று தெரிவித்தார். மேலும், மத்திய பாஜக அரசுக்கு எதிராக பேச, சுதந்திரமான குரலாக இருப்பது முக்கியம். எதிர்க்கட்சியில் இருக்கும்போதே மோடி அரசை எதிர்க்கும் வகையில் கூட்டணி அமைக்க விரும்புகிறோம் என்றும், நான் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். நாட்டில் சுயேட்சையாக குரல் கொடுக்க வேண்டும் என்று எப்போதும் விரும்பினேன் என்றும் கூறினார்.