கவதி அம்மன் திருக்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

முன்னொரு காலத்தில், தேவர்களை அசுரர்கள் அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கியது. தீமையும், பாவமும் பெருகின அறியாமையும் அநீதியும் ஆட்சி புரிந்தன. அசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான். தேவர்களோடு அன்றி முனிவருக்கும் ஆன்றோருக்கும் தொல்லை கொடுத்து வந்தான். நிலமகளாகிய தாய், உலகை இருள் மயமாக்கும் தீய திறனை ஒழிப்பதற்குத் திருமாலை வேண்டி நின்றாள்.

“தீத்திறங்கொண்ட பாணாசுரனைப் பரசக்தியால் மட்டுமே கொல்ல முடியும்” என்று கூறிய திருமால் தேவர்களைப் பராசக்தியிடம் சரண்புக வழி கூறினார். அதன்படி தேவர்கள் பராசக்தியை வேண்டி ஒர் பெரு வேள்வி செய்தனர். வேள்வி முடிவில் சக்திதேவி வெளிப்பட்டாள். பாணாசுரன் தலைமையில் நிகழும் தீய செயல்களை ஒழித்து, ஒழுங்கும் அறமும் உலகில் நிலைபெறச் செய்வதாக உறுதி மொழிந்தாள்.

அன்று முதல் அவள் கன்னியாகுமரிக்கு வந்து கடுந்தவம் புரியலானாள். நாட்கள் கடந்தன. கன்னிதேவி மணப்பருவம் அடைந்தாள். சுசீந்திரம் என்னும் இடத்திலுள்ள இறைவன் சிவபெருமான் அவள் மீது காதல் கொண்டார். அவருக்கு அவளைத் திருமணம் முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அசுரர் தலைவன் ஒரு கன்னியால் தான் கொல்லப்படுவான் என்று பிரம்மதேவனால் விதிக்கப்பட்டிருந்ததால், இத்திருமணம் நிகழுமாயின், பாணாசுரன் அழிவுக்குரிய வாய்ப்பு கெட்டுவிடும் என்று நாரதர் உணர்ந்தார். ஆகவே அவர் இத்திருமணம் நிகழாதிருப்பதற்கு வேண்டிய வழிவகைகளைக் கருதலானார்.

அவர் பராசக்தியையும், சிவபெருமானையும் நேரில் சென்று கண்டு, திருமணம் குறிப்பிட்ட ஓர் நாளில், நள்ளிரவில், ஒரு நல்வேளையிலேயே நிகழ வேண்டும், அதற்கு ஆயத்தமாக இருங்கள் என கூறினார். குறித்த இரவில், நல்லநேரம் தவறிவிடக் கூடாதெனக் கருதிச் சிவபெருமான் கன்னியாகுமரிக்குப் புறப்பட்டார். போகும் வழியில், வழுக்கம்பாறை என்ற இடத்தை அடைந்தபோது, நாரதர் ஓர் சேவல் உருக்கொண்டு உரக்கக் கூவினார்.

பொழுது புலர்ந்து விட்டதெனத் தவறுதலாகப் புரிந்து கொண்ட சிவபெருமான் சுசீந்திரத்திற்கு வருத்தத்துடன் திரும்பினார். தேவியும், அதன் பின் என்றும் கன்னியாகவே இருப்பதாக முடிவு செய்து, தவத்தை தொடர்ந்தாள்.

திருமணத்திற்கென்று செய்யப்பட்ட உணவுப் பொருள்யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரிக்கடல் துறையில் அரிசி போன்ற வெண் சிறுமணலும், வேறுவகையான பலவண்ண மணலும் மிகுதியாகக் கிடப்பதைக் காணலாம்.

இவ்வாறு தேவி கடுந்தவமிருக்கும்போது, ஒரு நாள், பாணாசுரன் தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவளை நேரில் காண வந்தான். தேவியைக் கண்டதும் அவளை மணந்து கொள்ள வேண்டினான். ஆனால், தேவி மறுத்து விடவே அசுரன் அவளைத் தன் உடல் வலிமையால் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான்.

இத்தகைய தருணத்தை எதிர்நோக்கியிருந்த தேவியும் தன் போர்வாளை வீசினாள். நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர். இறுதியில், தேவி தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றொழித்தாள். தேவர் யாவரும் தேவிக்கு நன்றி செலுத்தினர். தேவியும் அவர்களை வாழ்த்தியருளியபின் மீண்டும் தன் தவத்தை மேற்கொள்ளத் தொடங்கினாள்.

கன்னிகா பூசை, சுயம்வர பூசை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும்.

வட இந்தியர்கள் வருகை அதிகம் உள்ள கோவில். இங்குள்ள கடற்கரையில் பக்தர்கள் தங்கள் காலம் சென்ற மூதாதையர்களுக்கு காரியம் செய்ய எள்ளும் தண்ணீரும் இறைத்து பிதுர்கடன் செய்கிறார்கள்.