பெங்களூரு:
ரஜினியின் ‘காலா’ படம் கர்நாடகத்தில் வெளியாவதை கன்னடர்கள் விரும்பவில்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.
தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன் 7-ம் தேதி நாடு முழுவதும் திரைக்கு வர உள்ளது. இதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
காவிரி பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால், காலா திரைப்படத்தை கர்நாடகா வில் திரையிட கன்னடர்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கன்னட வெறியரான கன்னட சளுவளி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜ் ரஜினி படத்தை திரையிடக்கூடாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, ரஜினியின் காலா படம் கர்நாடகாவில் வெளியாகாது என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.
காலா படம் கர்நாடகாவில் வெளியாவது குறித்து, கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் ரஜினி பேசியதாக தகவல் வெளியானது. தமிழக நடிகர் சங்கமும் பிரகாஷ்ராஜ் மூலம் கர்நாடக திரைத்துறையினருடன் பேசியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ரஜினியின் ‘காலா’ படம் கர்நாடகத்தில் வெளியாவதை கன்னடர்கள் விரும்பவில்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்து உள்ளார்.
இதன் காரணமாக ரஜினி படம் கர்நாடகாவில் வெளியாவது தடை பட்டுள்ளது.