இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார்.

விழாவில் பேசிய கமல்ஹாசன், ”கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழி என்ற ரீதியில் கமலஹாசன் பேசிய பேச்சின் உள்அர்த்தத்தை புரிந்துகொண்டதாகக் கூறிய கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, “கமலஹாசன் கன்னட மொழியை சிறுமைப்படுத்தியதாக” கூறினார்.
இதையடுத்து கர்நாடகாவில் கமலஹாசனுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததோடு, ‘தக் லைஃப்’ படம் எங்க தியேட்டரில் ஓடாது என்று அம்மாநில அமைச்சரும் எச்சரித்தார்.
மேலும் கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதனை ஏற்றுக்கொள்ள கமலஹாசன் மறுத்த நிலையில் கர்நாடக ஆதரவு குழுவான கர்நாடக ரக்ஷண வேதிகே, நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக பெங்களூரு போலீசில் புகார் அளித்துள்ளது.
பிரவீன் ஷெட்டி தலைமையிலான அந்த அமைப்பு, பெங்களூரு ஆர்டி நகர் காவல் நிலையத்தில் நடிகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
நடிகரின் “சர்ச்சைக்குரிய அறிக்கை” தங்களை அவமதிப்பதாகவும், கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே பகைமையை விதைப்பதாகவும் அந்த அமைப்பு புகாரில் தெரிவித்துள்ளது.