சென்னை:
கர்நாடகாவில் தமிழ் இளைஞரை தாக்கிய கன்னட வெறியர்கள் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்போவதாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு ஸ்ரீராம்புரா பகுதியை சேர்ந்த கல்லூரி தமிழ் மாணவர் சந்தோஷ். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர், கர்நாடகாவிலேயே பிறந்து வளர்ந்தவர். சமீபத்தில் இவர், காவிரி பிரச்சினை தொடர்பாக கன்னட நடிகர்களை கிண்டல் செய்து தனது பேஸ்புக் பக்கத்தில் சில கருத்துகளை பதிவிட்டார்.

இதையடுத்து இவரை தேடிப்படித்த கன்ட வெறியர்கள், நடு ரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியதுடன், மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்தனர். அதை வீடியோவு்ம் எடுத்து சமூகவலைதளங்களில் பரவவிட்டனர். இந்த சம்பவத்தின்போது, அங்கிருந்த காவல்துறையினர் வேடிக்கை பார்த்துள்ளனர்.
இந்த சம்பவம், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் வ.கவுதமன், “அந்த இளைஞரை தாக்கிய கன்னட வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று காலை சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
“ கர்நாடக மாநிலத்தில் ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்ட தமிழ் இளைஞனுக்கான நீதி வேண்டியும், கர்நாடக வாழ் தமிழர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யவும், தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இன்று 12. 9. 2016 திங்கள்கிழமை காலை 11 மணியளவில் வழக்கு பதிவு செய்வதற்காக சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு தமிழக உரிமைகளுக்கான மாணவர் கூட்டமைப்பினை சார்ந்த மாணவ தலைவர்களோடு வருகின்றோம். எப்பொழுதும் போல் தங்களின் மேலான ஆதரவினை தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” என்று வ.கவுதமன் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel