பெங்களூரு

ன்னும் ஆறு மாதங்களுக்குள் கன்னட மொழியை கற்றுக் கொள்ளாத வங்கிப் பணியாளர்கள் வேலையை இழக்க நேரிடும் என கன்னட மேம்பாட்டுக் கழகம் அறிவித்துள்ளது.

கன்னட மொழி அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து தற்போது வங்கிகளின் பக்கம் தனது கவனத்தை கன்னட மேம்பாட்டுக் கழகம் திருப்பியுள்ளது.  மாநிலத்தில் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், மற்றும் கிராம வங்கிகளுக்கு ஒரு அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

இதைப் பற்றி கன்னட மேம்பாட்டுக் கழகத்தின் சேர்மன் சித்தராமையா கூறியதாவது :

”பேங்க் சலான்கள், விண்ணப்பங்கள் போன்றவை எல்லாமே, ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே காணபடுகின்றன.   மாநிலம் எங்கும் கன்னட மொழி மட்டுமே தெரிந்துள்ளவர்கள் அதிகமாக உள்ளார்கள்.  அவர்களை வங்கிகள் கண்டுக் கொள்வதில்லை.  இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், வங்கி ஊழியர்களில் கன்னடம் தெரியாதவர்களும் இருக்கிறார்கள் என்பதே.   எனவே வங்கிகள் அனைத்தும் தங்களின் ஊழியர்களை இன்னும் ஆறு மாதங்களுக்குள் கன்னடம் கற்குமாறு வலியுறுத்த வேண்டும்.  அப்படி கற்றுக் கொள்ளாத ஊழியர்களை வேலையை விட்டு நீக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி அனைத்து வங்கிகளும் மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.   அதன்படி கர்நாடகாவில் உள்ள வங்கிகளுக்கான ஊழியர்களை தேர்ந்தெடுக்கும் போதே அவர்களுக்கு கன்னட மொழி தெரிந்திருப்பதை உறுதி செய்த பின் தேர்ந்தெடுக்க வேண்டும்.  அதற்காகவே இந்த ஆறுமாத கெடு கொடுக்கப்பட்டுள்ளது.  பொதுவாக கிராம வங்கிகளிலும் கன்னட மொழி தெரியாத ஊழியர்கள் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.  கன்னடம் ஆறு மாதங்களுக்குள் கற்க முடியாத ஊழியர்களை கெடு முடிந்த உடன் பணி நீக்கம் செய்யப்படவேண்டும்” என கூறியுள்ளார்.

இதை வங்கிகள் செயல்படுத்துவதை அறிந்துக் கொள்ள குழுக்கள் அமைத்து, அந்தக் குழுக்கள் அடிக்கடி மேற்பார்வை இடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வங்கி ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.   பெயர் தெரிவிக்க விரும்பாத வங்கி ஊழியர் ஒருவர், ”எனக்கு கன்னடம் தெரியாது.  நான் கற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்.  ஆனால் வங்கி நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமா, அல்லது ஊழியர்களே செய்துக் கொள்ள வேண்டுமா என்பதை வங்கி நிர்வாகம் இதுவரை சொல்லவில்லை.  என்னைப் பொறுத்தவரை என் மனைவி கன்னடப்பெண் என்பதால் நான் கற்க முடியும்.   ஆனால் மற்றும் உள்ள பல வங்கி ஊழியர்களுக்கு இது மிகவும் கடினமே.” என்றார்.

வங்கியின் ஒரு சில ஊழியர்கள் இது போல ஒரு உத்தரவை இதுவரை எந்த வங்கி நிர்வாகமும் இதுவரை  அறிவிக்கவில்லை என கூறுகின்றனர்.