கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு – பகுதி 2
பா. தேவிமயில் குமார்
1. கவலை
பிள்ளைகளின்
பார்வையில் படாமல், தம்
காதல் கடிதங்களை
ஒளித்திடும் போதுதான்,
பருவகால காதலின்
பயம் வருகிறது
பெற்றவர்களுக்கு !
2. தொலைந்திடு
காதலில்
தொலைந்திடு
காதலை
தொலைத்திடாமல் !
3. ஒயின்
இருவரின்
இதழ்பட்டவுடன்
ஒரு கோப்பை நீர்
ஒயின் ஆனது !
வா, போகலாம்,
மதுபானச் சாலைக்கு
ஆள் எடுக்கிறார்களாம் !
4. அன்றாடம்
கஞ்சிக்குப் பணமில்லை
குடிக்கப் பணம் ஏது ? என
அம்மா சண்டையிடுவது
அன்றாடங் காட்சியானது !
அன்றாடங் காய்ச்சியின் வீட்டில் !
5. குடி
குடி, குடியைக் கெடுக்கும்
குடி(சை)யே இல்லாதவனின்
குடியையும் கெடுக்கும் !