கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு – பகுதி 36
பா. தேவிமயில் குமார்
முதுகில் சுமக்கும் மூட்டைகள்
புத்தனாகும் வரை
புத்தகம் படித்திட
பரிதவிக்கிறேன் நான்
பிடிபடாத அலுவல்களிடையே,
வாங்கிய நூல்களில்
ஓரம் கத்தரிக்காமல்
ஓரத்தில் உறங்கும்
ஒரு நூறு கனவோடு,
காலையில் படிக்க
கனத்த ஆசை ஆனால்
காலை முதலே என்
கடமைகள் என் முன்னே,
மாலையில் படிக்க ஆசை
மூச்சு முட்டும் பணியில்
மூர்ச்சையாகி போன
மயக்க நிலை அமர்வு,
நிரஞ்சனா நதி தந்த
நித்திய உண்மையில்
நானும் கிடக்க ஆசையே,
ஞானம் பெற ஏங்குகிறேன்,
சமூக வலையில்
சிக்கி தவிக்கிறேன்
சிக்கெடுக்க நூல்கள்
சிக்கிட வேண்டுகிறேன்,
குற்றவியல் செய்தி
குவிந்து கிடக்கும்
காலை இதழ்கள் தரும்
கனத்த சுமை பிடிக்கவில்லை,
ஆடம்பர மோகத்தை
அள்ளி கொடுக்கும்
அநியாய விளம்பரங்கள்
ஆட்டி படைக்கும் என்னை,
காசு கிடைக்கும் ஆசைக்கு
கண நேர ஓய்வில்லை,
கால்களில் சக்கரம்
கட்டிய நவீனன் நானே,
ரிஜு பாலிக்கா ஓரம்
ரீங்காரமிடும் வண்டாக
அவனின் பாதத்தில்
அடங்கிட ஆசை,
அனைத்தையும் துறந்த,
ஆறாம் நூற்றாண்டின்
ஆன்மீக பக்கங்களில்
ஒடுங்கிட ஆசையே….
அடுத்தடுத்து அடுக்கிய ஆசைகள்… என்னை
அப்படியே அள்ளுகிறது
இங்கேயே தங்கிடு என…