கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு – பகுதி 34
பா. தேவிமயில் குமார்
அன்புள்ள ஆசிரியர்
ஆசிரியரே நீங்கள்
இடையில் வந்த
உறவுதான்… ஆனால்
இடைவிடாத உறவு,
இரத்த சொந்தமில்லை
ஆனாலும்,
சொத்து சுகத்தை விட
சுகமான நினைவுகள்….
கடவுளுக்கு அடுத்ததாய்
கைகள் தானாக….
அனிச்சையாக உயரும் இடத்தில் நீங்கள்….
காகித பூக்களுக்கு
ஆயுத எழுத்தை
அறிவித்த அறவழி
ஆன்றோர் நீங்கள்!
உங்கள் கைப்பிடித்தே
உலக உருண்டையை
ஒரு சுற்று வருகிறேன் இப்போதும்…..
உங்கள் பிரம்படி
எங்களுக்கு வாழ்க்கையில்
பிறழாத அடியாக
மாறியதை மறுக்க
முடியாது!
மேய்ப்பரின் மந்தையில்
மூலையில் உறங்கும்
ஆட்டுகுட்டியை
அகிலத்தின் மூலை முடுக்கெலாம்அறிய வைத்தவர்!
விலையில்லா அறிவுரையை
விலை மதிப்பில்லாத
வாழ்க்கைக்கு
உரமாக இட்டவரே!
சுணங்கிய எங்களை
வணங்கத்தகும்
அளவுக்கு மாற்றிய
அறிவுத் தீவின் அரிய
அரசர்களை வணங்குகிறேன்!