கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 33

பா. தேவிமயில் குமார்

துணையாய் வா

கொத்து கொத்தான
காய்கறி தோட்டம்
காத்திருக்கிறது
அவளின் கைகளில்
நீர் அருந்திட,

கோலி குண்டுடன்
கூட விளையாடிய
கூத்துப் பட்டறை
கூட்டாளிகளின்
கேலி கிண்டல்கள்
காத்திருக்கின்றன…

அடிக்க வேண்டாம்
அரவத்தை, என
கெஞ்சிய அந்த
குரலை எண்ணிடும்
கொல்லைப்புற பாம்பு, அவளைப்
பார்க்க ஏங்குகிறது,

அவள் வைத்த
உணவை சாப்பிட்ட
அத்தனை தெருநாயும்
அவள் நினைவில்,

அப்பா சாப்பிடு என
அடம் பிடித்த அவள்
அழகிய முகம் பார்க்க
ஆவலாக தந்தை,

அரிசி எந்த மரத்தில்
கிடைக்கும் என
பகீர் கிளப்பிய மகளை
பரவசத்துடன் பார்க்க
நோக்கும் தாய்,

அவளுக்கே தெரியாமல் அவளை
காதலித்த
அவனும் அவளை
பார்க்க வருகிறான்.

உடன் பிறந்தவர்கள்
ஒளி மிகுந்த
முகத்துடன் வரவேற்க
முந்தி கொண்டு
முண்டியக்கின்றனர்,

வந்தவள் மெதுவாக
வாய் திறக்கிறாள்
இன்று மட்டுமே இங்கு
நாளை எங்கள்
ஊருக்கு நான் செல்ல
வேண்டுமென……

கணவனின் கையை
துணையாகக் கொண்டு
தளிர்க்கரம்
பிசைந்த படி…