கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு – பகுதி 32
பா. தேவிமயில் குமார்
கோடை மழை
வெப்பம் மேலெழும்
விமரிசையில்
ஒவ்வொரு துளியின்
வீழலும் வெற்றி
விழாவாக,
யாரும் அறியா
அந்தர வேர் ஈரம்,
அகமெல்லாம் பூக்கும்
பருவ பெண்ணின்
புது நாணமாக,
மண் படிந்த
மரங்கள் நீராடும்
மங்கள ஈரம்,
புனித நீராட்டு விழா,
பூமிப் பெண்ணுக்கு,
வணிக சேவையில்
வெளிர்மேக
அங்காடியுள்,
வானவில் ஆடை,
வண்ண தாவணி
உடனடியாக
விற்றுத் தீர்கிறது,
வெய்யோன்
ஓய்வெடுக்கும்
இடைவேளையில்
அடைமழை ,
அடித்துப் பிடித்து
உடன் போக்காக
ஓடிவரும் பூமிக்கு,
ஒலியும் ஒளியும்
ஒலி(ளி)க்கும் வேளை
இரவென எண்ணி வெள்ளாம்பல்
விரிக்கும் இதழ்,
இந்த முறையாவது
உண்டாக மாட்டேனா?
என ஏக்கத்துடன்
ஒரு தரிசு நிலம்,
வரவேற்கும் துளியை,
கட்டியங்காரனாய்
காடு மேடெல்லாம்
மழை வருவதை
முன்னறிவிக்கும்
மழைத் தட்டான்,
அரை ஏர் மழையா?
ஒரு உழவு மழையா?
வாச தெளிச்ச மழையா?
என ஒரு விவசாயி,
ஓலை குடிசைக்குள்
கோடை மழையை
கும்பிடுகிறான்.
கை கூப்பியவாறே,