கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 19

பா. தேவிமயில் குமார்

நடை மறந்த நதி

பெண் பெயர் கொண்டதால்
அவளுக்கும்
ஆங்காங்கே தடைகள்!!!!

உனக்கு எந்த
உரிமையும் உன் மேல்
இல்லை….

எங்கள் வழிகாட்டுதல் படியே
உன் வாழ்க்கையை நீ
வாழ்க வேண்டும்!!!

எந்த வழியில் உன்
வாழ்க்கை பயணம்
என்பதை நாங்கள்
முடிவு செய்வோம்!!

உன் சுயத்தை தொலைத்து விட்டு
சும்மாயிரு… மற்றதை
நாங்கள் பார்த்து கொள்கிறோம்…

எங்கு சென்றாலும்
உன்னை சிறையெடுப்போம்
ஏன்? என கேட்க கூடாது!

உன்னை சாக்காக வைத்து
ஊரெல்லாம் கலவரம்
உண்டாக்குவோம்!!!

எங்கள் வீட்டு கோபம், வருத்தம்
அனைத்தையும் உன் மீது
கொட்டி களங்க படுத்துவோம்!!!

நீ எங்களுக்கு என்ன செய்தாலும்
நாங்கள் நன்றி கெட்டவர்களாகவே
இருப்போம்!!!

உன்னை அடைத்து
வைப்பதில்
எப்போதுமே
எங்களுக்கு மகிழ்ச்சிதான்!!!!

நீ நடை மறந்து விடு
நதி பெண்ணே!
நாங்கள் காட்டும் பாதையில்
பயணித்தால் போதும்!!!

இப்படி ஏதேதோ
ஒவ்வொரு நாளும்
சட்டங்களையும்
சண்டைகளையும்
சாக்கடைகளையும்
அள்ளி வீசினாலும்…….

ஒரு நாள் நடை மறந்து ஊருக்குள்
பயணம் செய்தது!!!
அடக்கிய அனைவரையும்…
அடக்கி விட்டு அமைதியாக நடையிட்டு
சென்றது…. நதி …
பெண்ணின் கோபத்தை போலவே!!!