சென்னை
திமுகவில் பெண்களை அதிக அளவில் இணைக்க மகளிரணி செயலர் கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
மக்களவை உறுப்பினரும் திமுக மகளிரணிச் செயலருமான கனிமொழி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“திமுக கொள்கை உறுதி கொண்ட இளைஞர்கள், எழுச்சிமிக்க பெண்களால் கட்டமைக்கப்பட்டது. திமுகவின் அடித்தளமாக விளங்கும் இளையவர்கள் பலரை நம் கொள்கை சென்றடையவும், திமுகவில் அவர்களை உறுப்பினர்களாக இணைக்கவும் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 18ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
தமிழ் நாட்டில் மக்கள் தொகையில் கணிசமான பங்கு பெண்கள் உள்ளனர். நாளைய சமுதாயத்தின் சிந்தனையை வடிவமைக்கும் திறன் பெற்றவர்களாக இன்றுள்ள 18 முதுல் 30 வயதுடைய இளம் பெண்கள் உள்ளனர். திமுகவின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இவர்களின் பங்கு இன்றியமையாதது.
அடுத்த தலைமுறைக்கான சுயசிந்தனை உள்ளோரை திமுக மகளிரணி உருவாக்க வேண்டும். அவ்விதத்தில் 18 முதல்30 வயதுடைய இளம் பெண்களை திமுகவில் மகளிரணி உறுப்பினர்களாக இணைத்து, அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.
எனவே அரசியலில் ஆர்வம் காட்டத் துடிக்கும் இளம் பெண்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதைத் தாண்டி, 18 முதல் 30 வயதுக்குள் உள்ள இளம் பெண்களை உறுப்பினர்களாக இணைத்து அவர்களுக்கு அரசியலின்மேல் ஈடுபாடு ஏற்பட வழிவகை செய்து திமுகவின் எதிர்காலத்துக்கான அடித்தளம் வலுவாக உள்ளதை உறுதி செய்வோம்”
எனத் தெரிவித்துள்ளார்.