சென்னை

ஸ்மிரிதி இரானி உலக பட்டினி குறியீடு பட்டியலை ஏற்க மறுத்ததற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்ற தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.  அவர் தனது உரையில், இந்தியாவின் உண்மையான நிலவரத்தை அறியாமல் உலக பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 140 கோடி மக்களில் வெறும் 3 ஆயிரம் பேரிடம் இருந்து மட்டும் கருத்துக் கேட்டு வெளியிடப்பட்ட பட்டியல் மூலம் எப்படி உண்மையான நிலவரத்தை நம்மால் அறிய முடியும் என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்தை விமர்சித்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக பட்டினி குறியீடு பட்டியல் தயார் செய்யப்பட்ட முறையை அறிந்து கொள்ளாமல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதை  விமர்சித்துப் பேசியிருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஊட்டச்சத்துக் குறைபாடு, உணவு தட்டுப்பாடு, குழந்தைகள் உயிரிழப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மத்திய பாஜக அரசின் தகுதி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இந்த பேச்சு மூலம் தெரிய வந்திருப்பதாகக் கனிமொழி கடுமையாக  விமர்சித்துள்ளார்.