டில்லி
சென்னையில் ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளார்.
சென்னை நகரில் உள்ள ஐஐடி வளாகத்தில் கேரளவைச் சேர்ந்த மாணவி பாத்திமா கடந்த வாரம் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவருடைய தற்கொலைக்கு ஐஐடியின் பேராசிரியர்கள் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது நாடெங்கும் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. இது குறித்த வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
பாத்திமாவின் தந்தை லத்தீப் தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதற்குக் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார். இவ்வழக்கு தொடர்பாக ஐஐடி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், மற்றும் ஹேம சந்திரன் ஆகிய மூவருக்கும் இன்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
இன்று மக்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி, “சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. அத்துடன் எஃப் ஐ ஆர் அறிக்கையில் பாத்திமா குற்றம் சாட்டிய மூவரில் ஒருவர் பெயரும் இடம் பெறவில்லை. இந்த விவகாரத்தில் யாரைப் பாதுகாக்க முயற்சி நடைபெற்று வருகிறது?
மாணவி பாத்திமாவின் தற்கொலை குறித்த தகவல் அறிந்து அங்கு அவர் பெற்றோர் சென்ற போது அவருடைய அறை முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டிருந்தது. அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டிருந்தன. அந்த மாணவி தூக்குக்குப் பயன்படுத்திய கயிறும் அங்குக் காணப்படவில்லை.
எந்த ஒரு கல்வி நிலையத்திலும் சாதி மற்றும் மத ரீதியான பாகுபாட்டுக்கு இடம் அளிக்கலாமா? இத்தகைய பாகுபாடு காரணமாக உயர் கல்வி நிலையங்களில் இதுவரை 72 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றின் நிலை என்ன? மாணவர்கள் அதிக அளவில் உயிரிழக்கும் இடமாக ஐஐடி மாறி வருவது ஏன்? இவ்வாறு மாணவர்கள் தற்கொலை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும்” என உரையாற்றி உள்ளார்.