கொழும்பு:

லங்கை சென்றுள்ள திமுக எம்.பி. தலைமையிலான குழுவினர் அங்கு பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது,  தமிழக மீனவர்கள்  பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது.

இலங்கை அமைச்சரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற கனிமொழி, அங்கு இலங்கை பிரதமரை சந்தித்து, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசினார். திருமண நிகழ்ச்சியில் அதிபர் சிறிசேனாவையும் கனிமொழி சந்தித்தார்.

நேற்று மாலை  பிரதமர் ரணிலை சந்தித்த கனிமொழி தலைமையிலான குழுவினர்,  கொழும்பில்  கடலில் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விவகாரம், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுவது குறித்து பேசியதாகவும், மீனவர்களை விடுவிக்கும்போது படகுகளையும் சேர்த்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், போரால் பாதிக்கப்பட்ட கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் மீள்குடியேற்றம் குறித்து ரணிலிடம் கனிமொழி கேட்டறிந்ததாகவும், இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் சந்திப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.